பிரதமர் மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் மகள்: ஐநா நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நேத்ரா நியமனம்: ஜெனிவா கூட்டத்தில் வறுமை தொடர்பாக பேசவும் வாய்ப்பு

மதுரை: மதுரை, மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்திருப்பவர் மோகன். இவரது மகள் நேத்ரா (15). 9ம் வகுப்பு மாணவி. மோகன் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்த ரூ.5 லட்சத்தில், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை வாங்கி, 1,500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார். மோகன் மற்றும் நேத்ராவுக்கு தனது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில் நேத்ராவை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக ஐ.நா சபை (வளர்ச்சி மற்றும் அமைதிக்கான பிரிவு) அறிவித்துள்ளது.

மாணவியின் எதிர்காலத்திற்காக ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கியுள்ளது. இதுகுறித்து நேத்ரா கூறியதாவது: அன்னை இந்திரா காந்தியை எனக்குப் பிடிக்கும்.  அவரது ஆளுமைத்திறனும், இந்திய மேம்பாட்டிற்கான செயல்பாடுகளும் என்னை மிகவும் ஈர்த்தவை. எனக்குக் கிடைத்திருக்கிற ரூ.1 லட்சம் தொகையையும் கட்டாயம் பெற்றோரிடம் பேசி, ஏழைகளின் பசி போக்கும் வகையிலேயே செலவிடுவேன். ஜெனிவாவில் நடைபெற உள்ள ஐ.நா கூட்டத்தில் ஏழை மக்களின் பிரதிநிதியாக பேசுவேன். வசதிமிக்க, நடுத்தர வர்க்க மக்கள், தங்கள் பகுதி ஏழை மக்களுக்கு கொஞ்சமாவது உதவி செய்யவேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: