நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் உதவி தலைமை பொறியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா: ஊழியர்கள் பீதி

சென்னை: நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் உதவி தலைமை பொறியாளர் உட்பட 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகம் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை அலகு பிரிவில் பணியாற்றி வரும் உதவி கோட்ட பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவருடைய உதவி பொறியாளர் ஒருவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் என்று கூறப்படுகிறது. தற்போது அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அந்த உதவி பொறியாளருடன் 5 பேர் ஒரே அறையில் தங்கியுள்ளனர். அவர்கள், அனைவரும் ஒவ்வொரு பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள், தற்போது தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உதவி தலைமை பொறியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று திட்டங்கள் பிரிவு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் வந்து சென்றுள்ளனர். இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது வரை அந்த தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்படவில்லை. இதனால், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவது ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கொரோனா: அறநிலையத்துறையில் தலைமையிட இணை ஆணையராக இருந்த லட்சுமணன் கடந்த வாரத்தில் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராக பணியிட மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை அவர் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து சென்றுள்ளார். அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் தொடர்பாக கமிஷனர் பணீந்திர ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பேரில் ஆணையர் அலுவலகம் தற்காலிகமாக மூட வாய்ப்பிருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: