சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைவது எங்கே? கடைசி நேரத்தில் தமிழக அரசு முடிவை மாற்றியதாக தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 2வது விமான நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் தொழில்துறை மையமாக உருவெடுத்துள்ள சென்னை மாநகரில் தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் நெருக்கடி அதிகரித்துவிட்டதால் 2வது விமான நிலையம் அமைப்பது அவசியமாகிவிட்டது. இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை மையமாக கொண்டு காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் தமிழக அரசு முடிவை மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக ஆய்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. செய்யாறில் அரசு வசம் ஏற்கனவே 1500 ஏக்கர் நிலம் இருப்பதால் விமான நிலையம் அமைக்க மேலும் 2000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது எளிது என்பதே இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது இங்கு நிலம் கையகப்படுத்தவதற்கான செலவு குறைவு என்ற காரணமும் கூறப்படுகிறது. செய்யாறில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நேரில் ஆய்வு செய்யுமாறு மத்திய விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்கத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories: