இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கை தகுதி பாடங்களின் பட்டியலில் வேதியியல் நீக்கம்?: ஏஐசிடிஇ விளக்கம்

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தகுதி பாடங்களின் பட்டியலில் இருந்து வேதியியல் நீக்கப்பட்டதா என்பது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ஏஐசிடிஇ விளக்கம் அளித்துள்ளது. இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கைக்கான தகுதிப் பாடங்களின் பட்டியலில் இருந்து  வேதியியல் பாடத்தை நீக்கியதாக வெளியான செய்திகள் குறித்து, வைகோ, மாநிலங்களவையில் பேசினார். இது தொடர்பாக அவர், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு (ஏஐசிடிஇ) இயக்குநருக்கு கடந்த பிப்ரவரி 27ம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்து, ஏஐசிடிஇ உதவி இயக்குநர், வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம்:பொறியியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான தகுதிப்பாடுகளில், அனைத்து இந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

2001ம் ஆண்டு முதல், இத்தகைய படிப்புகளுக்கான தகுதிப் பாடங்களில், இயற்பியலும், கணிதமும் கட்டாயப் பாடங்கள் ஆகவும், அவற்றுடன் கூடுதலாக, வேதியியல், உயிரி தொழில்நுட்பம் , உயிரியியல், தொழில்நுட்பப் பாடங்கள்  ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பாடமும் படித்தாக வேண்டும் என்பதே அடிப்படைத் தகுதியாக இருக்கின்றது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட கூடுதல் பாடங்களுள், புதிய பாடப்பிரிவுகளான கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தகவல் நடைமுறைகள், வேளாண்மை, பொறியியல் வரைகலை, வணிகக்கல்வி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, வேதியியல் பாடம் நீக்கப்பட்டதாக, வெளியான செய்திகள் தவறானவை.

Related Stories: