சீன வீரர்கள் ஊடுருவவில்லை என மத்திய அரசு உறுதிப்படுத்துமா? ராகுல் கேள்வி

* நேபாளத்துடன் என்ன நடந்தது. லடாக்கில் என்ன நடக்கிறது, ஏன் என்பது பற்றி மத்திய அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும்

புதுடெல்லி: இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவவில்லை என்பதை மத்திய அரசால் உறுதிப்படுத்த முடியுமா? என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்திய - சீனா இடையே கடந்த சில நாட்களாக எல்லை தொடர்பான பிரச்னை நடந்து வருகின்றது. 2017ம் ஆண்டு இந்தியா சீனா இடையே ஏற்பட்ட டோக்லாம் பிரச்னை சுமார் 73 நாட்களுக்கு பின்னர் சுமூகமானது. இந்நிலையில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து இந்திய, சீன எல்லையில் இருநாட்டு வீரர்களிடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா மறுத்துவிட்டது. இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளியானது.

இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்திருந்தார். கடந்த மாதம் 26ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நான்காவது முறையாக பேசிய ராகுல் காந்தி, “எல்லையில் என்ன நடக்கிறது என்பதை அரசு மக்களிடம் பகிர்ந்துவெள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார். கடந்த 29ம் தேதி தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்திய சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசு அமைதி காப்பது பதற்றம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். எல்லையில் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் ராகுல்காந்தி எல்லை பிரச்னை தொடர்பாக மத்திய அரசிடம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பதிவில், “நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசானது, சீன வீரர்கள் யாரும் இந்தியாவிற்குள் ஊருடுவவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா? நேபாளத்துடன் என்ன நடந்தது. லடாக்கில் என்ன நடக்கிறது, ஏன் என்பது பற்றி மத்திய அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும். மத்திய அரசிடம் வெளிப்படைதன்மையை நான் பார்க்கவில்லை. லடாக் மற்றும் சீன விவகாரமானது தற்போது நடந்து கொண்டிருக்கும் பிரச்னை.

அதில் வெளிப்படைத்தன்மை தேவை” என பதிவிட்டுள்ளார். மேலும், அதனுடன் கிழக்கு லடாக்கில் இரு நாட்டு வீரர்கள் மோதல் விவகாரத்தில் தீர்வு காணும் வகையில், ஜூன் 6ம் தேதி இந்திய-சீன உயர்நிலைட ராணுவ அதிகாரிகள் கூட்டம் நடைபெறும் என்பது குறித்து செய்தியையும் இணைத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சீங் சீன வீரர்கள் அதிக உயரத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதை ஒப்புகொண்டுள்ளதையும் ராகுல் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Stories: