தமிழகத்தில் மேலும் 3 சிறப்பு ரயில்களை இயக்குக...! மத்திய ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை என தகவல்

சென்னை: மேலும் 3  சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. அதில் திருச்சி - செங்கல்பட்டு - திருச்சி (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), அரக்கோணம் - கோவை -அரக்கோணம் (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்), திருச்சி - செங்கல்பட்டு - திருச்சி (சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்) உள்ளிட்ட 3 ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், நாட்டில், ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக, கடந்த மாதம், 1ம் தேதி முதல், தொழிலாளர் சிறப்பு ரயில்களை, ரயில்வே இயக்கி வருகிறது. கடந்த 12-ம் தேதி முதல், பயணியர் வசதிக்காக டில்லியிலிருந்து 15 நகரங்களுக்கு ஏசி ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ரயில் சேவையை மீண்டும் துவக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இன்று முதல் 200 ரயில்களை அட்டவணைப்படி ரயில்வே இயக்குகிறது. தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

அதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கோவை -காட்பாடி, திருச்சி -நாகர்கோவில், மதுரை -விழுப்புரம், கோவை -மயிலாடுதுறை ஆகிய நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் மேலும் 3  சிறப்பு ரயில்களை இயக்க மத்திய ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை என தகவல் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரம்;

திருச்சி - செங்கல்பட்டு

திருச்சி - செங்கல்பட்டு இடையே இயங்கும் சூப்பர் பாஸ்ட் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது காரைக்குடி முதல் சென்னை எழும்பூர் வழித்தடத்தில் இயங்கும் பல்லவன் விரைவு ரயில் சிறப்பு ரயிலாக இந்த வழித்தடத்தில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சியில் காலை 7 மணிக்கு கிளம்பி 11.30 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் - கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் கோவை விரைவு ரயில் சிறப்பு ரயிலாக அரக்கோணம் - கோயம்புத்தூர் வழித்தடத்தில் இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காலை 7.10 மணிக்கு அரக்கோணத்தில் கிளம்பி மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

திருச்சி - செங்கல்பட்டு

திருச்சி - சென்னை எழும்பூர் விரைவு ரயில் சிறப்பு ரயிலாக திருச்சி - செங்கல்பட்டு இன்டர்சிட்டி இடையே சிறப்பு ரயிலாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்த ரயில் திருச்சியில் காலை 6.30 மணிக்கு கிளம்பி மதியம் 12.40 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: