ரயில்களில் பயணம் செய்ய இ-பாஸ் கட்டாயம் என்ற அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கண்ணையா வலியுறுத்தல்

சென்னை: பெரம்பூர் கான்ஸ்டபிள் சாலையில் உள்ள புதிய ரயில்வே மருத்துவமனையை தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா, தலைவர் ராஜா ஸ்ரீதர், கோட்ட செயலாளர் பால் மெக்ஸ்வெல் ஜான்சன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டனர்.

மேலும் இந்த மருத்துவமனையில் புதிதாக அமையவுள்ள கொரோனா வார்டையும்  பார்வையிட்டனர். அதன் பிறகு கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க 44 புதிய ஒப்பந்த மருத்துவர்களும், 110 செவிலியர்களும் உடனடியாக பணியில் அமர்த்த உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. மற்ற நோய்களுக்கும் மருத்துவம் பார்க்க முன்வர வேண்டும். பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய மருத்துவமனையில்  கொரோனாவுக்கு தனியாக ஒரு பகுதியை ஒதுக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் இங்கு வார்டுகள் தயாராகி விடும். 100 வார்டுகள் கொண்ட இங்கு 180 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இங்கு அனைத்து மக்களும் சிகிச்சை பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு  அதிக கட்டணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் ரயில்வே மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரயிலில் பயணிக்க தற்போது இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் இரயில் டிக்கெட் கிடைத்தும் இ-பாஸ் கிடைக்காமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போக முடியாத நிலை உள்ளது. இ-பாஸ் கட்டாயம் என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: