கொரோனா ஊரடங்கு, வறட்சியால் பாதிப்பு கண்ணீர் வடிக்கும் தென்னை விவசாயிகள்: மத்திய, மாநில அரசுகள் கைவிட்டதாக கதறல்

வேலூர்:  கொரோனா ஊரடங்கால் விளைச்சலும் இன்றி, அறுவடை செய்யப்பட்ட சிறிய அளவு தேங்காய்களையும் கூட விற்பனைக்கு அனுப்ப முடியாமல் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டதாக தென்னை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ‘பிள்ளைய பெத்தா கண்ணீரு, தென்னைய பெத்தா இளநீரு’ என்ற பழமொழிக்கும், இன்றைய நிலைக்கும் சம்பந்தமே கிடையாது என்று தென்னை விவசாயிகள் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தென்னை விவசாயிகளின் வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டதே இதற்கு காரணம்.வேலூர் மாவட்டத்தில் வறட்சியின் காரணமாக தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து வசதியின்றி, ஓரளவு விளைந்த தேங்காய்களையும் விற்பனைக்கு அனுப்பவும், ஏற்றுமதி செய்யவும் முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இளநீர், தேங்காய் விற்பனை களைகட்டும். ஆனால் இந்தாண்டு கோயில் திருவிழாக்களில் கூட்டம் சேரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் இல்லாமல் தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு தேங்காய், வெற்றிலை அடங்கிய தாம்பூலம் வழங்கப்படும். ஆனால் திருமணங்கள் சாதாரணமாக நடத்தப்படுவதால் அதிகளவில் தேங்காய்களை வாங்குவதில்லை. ஓட்டல்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சமைப்பதால், தேங்காய் விற்பனையில்லை. இதுபோன்று பல்வேறு வழிகளில் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் உதயகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்தான் அதிகளவு தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விளையும் தேங்காய்கள் மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. தற்போது ஊரடங்கு உத்தரவில் ஓரளவு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் வாடகை வாகனங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.இதுதவிர வறட்சியால் தேங்காய் விளைச்சல் இந்தாண்டு 10ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது. அதையும் அறுவடை செய்ய முடியாமல் பலர் மரங்களிலேயே விட்டுவிட்டனர். தேங்காய், இளநீர் ஆகியவற்றை பறிக்க மரம் ஏறுபவர்கள் குறிப்பிட்ட இடங்களில்தான் இருக்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் குறிப்பிட்ட தூரம் வாகனங்களில் செல்ல முடியாதது போன்றவையே இதற்கு காரணம்.ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு 1000 தேங்காய்கள் ₹15 ஆயிரம் வரை விலை போனது. தற்போது 1000 தேங்காய்கள் ₹7 ஆயிரம் வரை மட்டுமே விலை போகிறது. அதேபோல் கேரளா போன்ற மாநிலங்களுக்கான தேங்காய் நார், தென்னை சம்பந்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், பிரதம மந்திரியின் கிசான் யோஜனா திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் ₹2 ஆயிரம் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகையை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கியதாக சொல்லப்படுவது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. எனவே, ஊரடங்கால் விவசாயிகள் பாதிப்படைந்திருப்பதை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து விவசாயிகள் சங்க வேலூர் மாவட்ட தலைவர் லோகநாதன் கூறுகையில், ‘ஊரடங்கு உத்தரவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், எனக்கு தெரிந்த விவசாயி ஒருவர் கன்டெய்னர் லாரியில் தேங்காய் லோடு ஏற்றிக் ெகாண்டு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சென்றார். இந்நிலையில் வழியில் போலீசார் கெடுபிடியால் ஆங்காங்கே கன்டெய்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதில் தேங்காய்கள் அனைத்தும் நாசமானது. இதையடுத்து பாதி வழியிலேயே தேங்காய்களை கொட்டிவிட்டு வந்துவிட்டனர். இதுபோதாதென்று தேங்காய்களை ஏற்றி சென்ற வாகனத்துக்கு வாடகை வழங்கியதால் அவர் மேலும் நஷ்டமடைந்தார்.தற்போதைய சூழ்நிலையில் தேங்காய் விவசாயிகளுக்கு கேட்கும் விலை கிடைப்பதில்லை. ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிட்டதாக தோன்றுகிறது. இந்த நிலை மாறுவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். எனவே, விவசாய ெபாருட்களை ஏற்றிச் செல்ல வாகன வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்’ என்றார்.

தொழிலாளர்கள் பரிதவிப்பு

குடியாத்தம் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தென்னை மரங்கள் உள்ளன. மரங்களில் தேங்காய் பறிக்க மரம் ஏறுபவர்கள், தேங்காய் மண்டிகளில் தேங்காய் உரிப்பது, தேங்காய் ஏற்றி இறக்குவது என ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலும் தேங்காய்களை அறுவடை செய்யவில்லை. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தேங்காய் விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் கதி இதுதான்.

செக்கு ஆலைகளும் முடங்கியது

தேங்காயை வெயிலில் காய வைத்து கொப்பரை தேங்காயாக மாற்றி, செக்கு ஆலைக்கு அனுப்பி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. தற்போது தேங்காய் அறுவடை செய்யப்படாமல் பெரும்பாலும் மரங்களிலேயே இருப்பதால் செக்கு தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும், செக்கு ஆலை உரிமையாளர்களும் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடியாத்தம் பகுதில் மட்டும் நூற்றுக்கணக்கான செக்கு ஆலைகளும் முடங்கியுள்ளன. இதேபோல் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான செக்கு ஆலைகள் முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேங்காய் மட்டை ஏற்றுமதி பாதிப்பு

தேங்காய் மட்டைகள் பால்கோவா கம்பெனிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விறகுகளுக்கு பதிலாக தேங்காய் மட்டைகளை பயன்படுத்துவதால் நீண்ட நேரம் நெருப்பு கனல் இருக்கும். வேலூர் மாவட்டத்தில் இருந்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் பால்கோவா ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால்  ஊரடங்கு காரணமாக பால்கோவா ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பால்கோவா தயாரிக்கும் கம்பெனிகள் தேங்காய் மட்டைகளை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டன. இதனால் தேங்காய் மட்டை ஏற்றுமதியும் முடங்கிவிட்டது.

தென்னை ஓலை விலை கிடுகிடு உயர்வு

தேங்காய் அறுவடை செய்யப்பட்டவுடன் தென்னை ஓலைகள் கழிக்கப்படும். இந்த ஓலைகள் பின்னப்பட்டு விற்பனை செய்யப்படும். ஓலை கொட்டகைகள் இந்த காலக்கட்டத்தில் மாற்றியமைக்கப்படும். இந்நிலையில் தேங்காய் அறுவடையுடன், தென்னை ஓலை அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்னை ஓலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு பின்னப்பட்ட தென்னை ஓலை ஒன்று ₹18க்கு விற்பனையான நிலையில், நடப்பாண்டில் ₹35க்கு விற்பனையாகி வருகிறது.

Related Stories: