கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி...!

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 மாதத்திற்கு மேலாக 4 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட  நிலையில்,படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கு கடந்த 31-ம் தேதியுடன் முடிந்த நிலையில், ஜூன் 1 முதல் முழு விலக்கு அளிக்கப்படுமா அல்லது 5ம் கட்டமாக ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா என கேள்வி  எழுந்தது. இது பற்றி மாநில முதல்வர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அதில், பெரும்பாலான முதல்வர்கள் ஊரடங்கை 2 வாரத்துக்கு நீட்டிக்கும்படி வலியுறுத்தினர். இந்நிலையில், ஊரடங்கு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 30-ம் தேதி வெளியிட்டது. பாதிப்பு  அதிகமுள்ள நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து, தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து  உத்தரவிட்டது. மேலும், ஜூன் 8-ம் தேதிக்கு பின் வழிப்பாட்டு தலங்கள், சென்னையில் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதல்வர் பழனிசாமி விளக்குகிறார். மேலும், முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக ஆளுநரிடம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: