ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் பல மடங்கு அதிகரித்த கொரோனா: திட்டமிடாததால் வீணான கட்டுப்பாடுகள்

சென்னை: பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்கு முறையான திட்டமிடல் இல்லாததே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 23 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு நேற்று முதல் விலக்கி கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை பின்பற்றி மாநில அரசும் பல்வேறு தகர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 90 சதவீத கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படும் என்று விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு மார்ச் 7ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25ம் தேதி ஏப்ரல் 14ம் தேதி வரை முதல் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு முடியும் நாளில் தமிழகத்தில் 1173 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

2வது கட்ட ஊரடங்கு ஏப்ரல் 15 முதல் மே 3 வரை அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையும் போது 3023 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. 3 வது ஊரடங்கு மே 4 முதல் மே 17 வது அமல்படுத்தபட்டது. இது நிறைவடையும் போது தமிழகத்தில் 11,224 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. கடைசி கட்ட ஊரடங்கு மே 18 முதல் மே 31 வரை அமல்படுத்தபட்டது. இந்த ஊரடங்கு முடியும் போது தமிழகத்தில் மொத்தம் 22,333 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2வது கட்ட ஊரடங்கு காலத்தில் குறைந்த எண்ணிகையில் இந்த கொரோனா பாதிப்பு 3 மற்றும் 4 வது கட்ட ஊரடங்கில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முறையான திட்டமிடல் இல்லாததுதான் காரணம் என்று மருத்துவ துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது :

கொரேனா கட்டுப்படுத்தவும்  கண்டறியவும் அதிக அளவில் சோதனை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தது. இதன்படி பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த முதல் மற்றும்  2து ஊரடங்கு காலத்தில் அதிக பரிசோதனைகளை செய்து இருக்க வேண்டும். ஆனால் அவற்றை செய்யாத காரணத்தால் 3 மற்றும் 4 வது கட்ட ஊரடங்குகளில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. இனியாவது மருத்துவ நிபுணர்கள் குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் சென்னையில் தினசரி 10 ஆயிரம் பேருக்கும், மற்ற மாவட்டங்களில் தினசரி 8 ஆயிரம்் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: