வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு: சரியான வாதங்களை முன்வைக்க முடியாது என குற்றச்சாட்டு

சென்னை: வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வக்கீல்கள், இதனால் வழக்குகளை முழுவதுமாக நடத்துவது கடினம் என்றும் சரியான முறையில் வாதங்களை முன்வைக்க முடியாது என்றும் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு  அடுத்து சென்னை  ஐகோர்ட் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. இதையடுத்து, அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 25 முதல் மே 31 வரை இந்த நடைமுறையே தொடர்ந்தது. இந்நிலை மாறி ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல் நீதிமன்றங்கள் செயல்படும் என்று வக்கீல்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஜூன் மாதமும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு வக்கீல்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்றங்களில் நேரடியாக ஆஜரானால்தான் வழக்குகளை முறையாக முன் வைக்க முடியும். வீடியோ கான்பரன்ஸ் விசாரணையில் இது சாத்தியமாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல் நீதிமன்றங்களிலேயே வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக்கோரி வக்கீல்கள் சங்கங்கள் நேற்று தமிழ்நாடு பார்கவுன்சில் ஆலோசனை நடத்தின. பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமையில் வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் உள்ளிட்டோர் நேரிலும், தமிழகம் முழுவதும் உள்ள வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இது குறித்து பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ் கூறும்போது, வீடியோ கான்பரன்ஸ்  முழுமையான விசாரணைக்கு உகந்ததாக இல்லை. பெரும்பாலான சங்கங்கள் வீடியோ கான்பரன்ஸ் ஒட்டுமொத்த தோல்வி என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். வீடியோ கான்பரன்ஸை 2 சவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

தமிழகம், புதுச்சேரி முழுதுவம் அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும். வழக்கு ஆவணங்கள் வக்கீல்களின் அறையில் உள்ளன. பல துறைகளில் தளர்வு அளித்துள்ள நிலையில் வக்கீல் தொழிலுக்கு தளர்வு இல்லை. எனவே, நீதிமன்ற விசாரணை நடத்த தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும் என்றார்.மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் கூறும்போது, மதுரை கிளை மற்றும் ஒன்பது மாவட்ட நீதிமன்றங்கள் போல அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து வழக்குகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.

Related Stories: