மண் கடத்தலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓடையில் சிலர் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளில் மண் எடுப்பதாக நேற்று பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு திரண்ட பொதுமக்கள், பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை சிறைபிடித்தனர்.விசாரணையில் அவை, கோவிலாஞ்சேரியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ரமேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. பொதுமக்களை பார்த்ததும் லாரி மற்றும் பொக்லைன் ஓட்டுனர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.பின்னர், பொதுமக்கள் இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், ‘ஆளும்கட்சி பிரமுகரின் வாகனங்கள் என்பதால், வருவாய்த்துறை சார்பில் புகார் அளித்தால் மட்டுமே, எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்,’ என தெரிவித்துள்ளனர்.

பின்னர், வருவாய் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, ‘இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. போலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறியுள்ளனர். இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி திரும்பி சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆளும்கட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர்,  மதுரப்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, சித்தாலப்பாக்கம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் உள்ள ஏரிகளில் இரவு நேரங்களில் 10க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தொடர்ச்சியாக மண் கடத்தி வருகிறார். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது மண் திருட்டில் ஈடுபட்ட லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கையும் களவுமாக பிடித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை வீட்டிற்கே சென்றுவிடுவதால், மண் திருட்டை கண்டும் காணாமல் உள்ளனர். இதனால், தொடர்ந்து மண் திருட்டு தடையின்றி நடைபெற்று வருகிறது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: