10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் எஸ்எஸ்எல்சி தேர்வு நடத்துவது சாத்தியமா?: சந்தேகம் எழுப்பும் கல்வியாளர்கள், பெற்றோர்கள்

சேலம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அறிவித்தபடி வரும் 15ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு நடைபெறுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்வு நாட்கள் நெருங்க,நெருங்க என்ன செய்வதென்று தெரியாமல், மாணவர்களும், பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தில் நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. மாணவர்கள்,தனித்தேர்வர்கள் என மொத்தம் 9.70 லட்சம் பேர் தேர்வெழுத காத்திருந்தனர். இவர்களுக்கென 3,825 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதனிடையே, கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு,பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள்,வரும் 15ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிவருகிறார். இந்நிலையில்,தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த இரு வாரங்களாக நாள்தோறும் 800 பேருக்கு குறைவில்லாமல்,கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.இந்த அசாதாரண சூழ்நிலையில்,அறிவித்தபடி வரும் 15ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,”மாணவர்கள் வீட்டிலிருந்து வந்து தேர்வெழுதிவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்வதற்குள் போக்குவரத்து,தேர்வு மையம் என எங்கு வேண்டுமானாலும், யார் மூலமாகவும் கொரோனா தொற்றிற்கு ஆளாக நேரிடும்.ஒவ்வொருவரையும் பாதுகாப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் வெளியில் இருந்து வருபவர்களுக்குத்தான் அதிகளவில் தொற்று ஏற்படுகிறது. அதன்படி,வெளியூரில் இருந்து வரும் மற்றும் விடுதிக்கு வந்து படிக்க வேண்டிய மாணவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்வது, அவர்களின் முடிவை உறுதி செய்வதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு மையத்திற்கு வருவதற்கு பிரத்யேக பஸ் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் 30 மாணவர்களை ஏற்றினாலும், தேர்வு எழுத வரும் அனைத்து மாணவர்களுக்கும் பஸ் வசதி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.தேர்வுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில்,இதுவரை தேர்வு மையம் மற்றும் இதர நடவடிக்கைகள் தொடர்பாகவும், கூடுதலாக அலுவலர்களை நியமிப்பது தொடர்பாகவும் எந்தவித ஆலோசனை கூட்டமோ, கலந்துரையாடலோ நடைபெறவில்லை. இதனால்,பள்ளிக்கல்வித்துறையினர் பலரும் தேர்வை நடத்த ஆர்வம் காட்டாதது உறுதியாகிறது. னவே,மாணவர்களின் பாதுகாப்பு கருதி,தேர்வை நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,”என்றனர்.

* புதிய அறிவிப்பின்படி, பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 15ம் தேதி தொடங்கி, 25ம் தேதி தேர்வுகள் நிறைவடைகிறது.

* நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 4.74 லட்சம் மாணவர்கள்,4.70 லட்சம் மாணவிகள், 144 சிறை கைதிகள் என மொத்தம் 9.45 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

* மாநிலம் முழுவதும்,5 கிமீ சுற்றளவுக்குள் ஒரு மையம் என்ற அடிப்படையில், 12,864 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

* உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 2.21 லட்சம் பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பது யார்?

இதுகுறித்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அரங்க.வீரன் கூறியதாவது: உயிரிழப்பில் சீனாவை மிஞ்சும் வகையில், இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முதலில் கொரோனாவை ஒழித்து, உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் தான் எதுவுமே. ஆனால், இதனை கண்டுகொள்ளாத அரசாங்கம்,தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வைத்து விளையாடி வருகிறது. சுமார் 10 லட்சம் மாணவர்கள்,2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடிய தேர்வு நடவடிக்கைகளில், ஒரு சதவீதம் கூட கொரோனா பரவாது என எந்த நம்பிக்கையில் அரசு உள்ளது என தெரியவில்லை. தற்போது பாதிக்கக்கூடியவர்களில்,80 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை என கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது,மாணவர்களும்,ஆசிரியர்களும் எப்படி தங்களை தற்காத்துக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுகிறது.எனவே,கொரோனா கட்டுக்குள் வரும் வரை காத்திருப்பதே தற்போதைக்கு சிறந்தது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மன அழுத்தம் அதிகரிக்கும்

இதுகுறித்து மனநல ஆலோசகர்கள் கூறுகையில்,”கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தேர்வு நடக்குமா? நடக்காதா?என்ற சந்தேகமும், குழப்பமும் பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் நிலவி வருகிறது.இதே குழப்பம் ஆசிரியர்கள் தரப்பிலும் மேலோங்கி இருக்கும். இதுவே,ஒருவித மன அழுத்த நோய் என கூறலாம்.அவ்வாறு அறிவித்தபடி தேர்வு நடந்தாலும்,நமக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம்,தேர்வுக்கு வரும் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவருக்கும்  இருந்து கொண்டே இருக்கும். இத்தகைய மன அழுத்தத்தில் மாணவர்களால் எப்படி தேர்வை எதிர்கொள்ள முடியும்?எனவே கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு,அதன் மீதான பயத்தை போக்கிய பின்னர் தேர்வை நடத்துவதே,சிறந்தாக இருக்கும்,”என்றனர்.

Related Stories: