6 ஆண்டு கால ஆட்சி ஏழைகளின் நலனுக்கு முன்மாதிரி; பல வரலாற்று தவறுகளை சரிசெய்தவர் பிரதமர் மோடி...உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்...!

புதுடெல்லி: கடந்த ஆறு ஆண்டுகளில் பல வரலாற்று தவறுகளை பிரதமர் மோடி சரி செய்துள்ளார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ தனித்து 303 இடங்களை பிடித்து  மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிறகு, பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த அரசு பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு ஆட்சியில், தேர்தல்  அறிக்கையில் குறிப்பிட்ட சில முக்கிய வாக்குறுதிகளை பாஜ நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டம் -370 ரத்து செய்தது.

 அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ராமர்  கோயில் விவகாரமும் உச்ச நீதிமன்றம் மூலம் தீர்க்கப்பட்டு, கோயில் கட்டும்பணிக்கான ஏற்பாடு நடக்கிறது. இது தவிர, முத்தலாக் செய்வது கிரிமினல் குற்றம் என்ற சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்தியில் மோடி தலைமையிலான பாஜ அரசு 2-வது முறையாக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் #1YearofModi2, #Article 370 என்ற ஹெஷ்டேக்கை பாஜகவினர்  பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியின் ஓராண்டு நிறைவு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரலாற்று சாதனைகள் நிறைந்த மோடியின் 2வது ஆட்சிக்காலத்தின் ஒரு  வருட வெற்றிகரமான பதவிக்காலத்தில், நாட்டின் பிரதமர் மோடியை மனதார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உங்கள் தொலைநோக்கு மற்றும் தீர்க்கமான தலைமையின் கீழ், இந்தியா தொடர்ந்து இதேபோல் முற்போக்கானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆறு ஆண்டுகளில் மோடி, பல வரலாற்று தவறுகளை சரிசெய்தது  மட்டுமல்லாமல், தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்க கடந்த 60 ஆண்டுகளாக உள்ள வெற்றிடத்தையும் அவர் நிரப்பியுள்ளார். கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சி என்பது, ஏழைகளின் நலனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

நேர்மையான தலைமை மற்றும் அயராத கடின உழைப்பின் பிரதிபலிப்புகள், நாட்டு மக்கள் தலைமையின் வைத்துள்ள நம்பிக்கை, உலகில் அரிதாகவே காணப்படுகிறது. அதேபோல் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து நாட்டின் முன்னேற்றத்திற்கு  பங்களித்த நாட்டு மக்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். பாஜ.,வின் அயராத கடின உழைப்பு, அரசின் சாதனைகள் மற்றும் பொது நலத் திட்டங்கள் குறித்து வீடு வீடாக சென்று பரப்பிய கோடிக்கணக்கான பாஜ., தொண்டர்களுக்கு எனது  மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: