கடந்த 3 ஆண்டுகளில் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பாத்ரூமில் வழுக்கி விழுந்தவர்கள் எத்தனை பேர்?: போலீஸ் கமிஷனர் அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னை காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூமில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பேர் வழுக்கி விழுந்தனர் என்பது தொடர்பாக 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயப்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக கூறி தேவேந்திரன் என்பவரை மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் நாதமுனி மற்றும் ஏட்டு சீனிவாசன் ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் வெளியில் வந்த தேவேந்திரன், மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை அவரது வாட்ஸ் அப் குழுவில் பரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் இது சம்பந்தமாக உதவி ஆய்வாளர் நாதமுனி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 27ம் தேதியன்று விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தேவேந்திரன், அம்பத்தூர் காவல் நிலைய குளியல் அறையில் வழுக்கி விழுந்து கைமுறிந்து விட்டதாக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தது.  இச்செய்தியை படித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு)  துரை.ஜெயச்சந்திரன் தானாக முன்வந்து வழக்குபதிந்து விசாரித்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார்.

அதில் கடந்த 2017 முதல் இதுவரை சென்னை மாநகரில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடந்துள்ளது. காவல்  துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளனவா, குளியலறைகளை முழுமையாக பராமரிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களை தடுப்பதற்கு ஆணையர் எடுத்த நடவடிக்கை என்ன என பல்வேறு கேள்விகளை எழுப்பி 2 வாரங்களில் போலீஸ் கமிஷனர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: