‘விற்பனை’ கை கொடுக்காததால் புது ‘ரூட்’ பொதுத்துறை நிறுவனங்களின் நிதி மீது மத்திய அரசுக்கு ‘கண்’

*  முடிஞ்ச அளவு டிவிடெண்ட் கொடுத்துடுங்க

*  பங்குகளை எல்லாம் திரும்ப வாங்கிக்கோங்க

சென்னை: பொதுத்துறை நிறுவனங்களிடம் இருக்கும் நிதி எவ்வளவு என ஆராய்ந்து வரும் மத்திய அரசு, டிவிடெண்ட் மற்றும் பங்குகளை திரும்ப வாங்கச் செய்வதன் மூலம் முடிந்த அளவு நிதியை திரட்ட திட்டமிட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் அவசர தேவைக்கு கைகொடுக்காததால் இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வருவாய் குறைந்ததால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட, பிற ஆதாரங்களில் நிதி திரட்டுவதற்கு மத்திய அரசு பல்வேறு வகையில் திட்டமிட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை மூலம் 2.1 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக, பட்ஜெட்டில் அறிவித்தது.  முதல்கட்டமாக பாரத் பெட்ரோலியம்(பிபிசிஎல்), ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா(எஸ்சிஐ) உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்குகளை விற்று நிதி திரட்ட தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில், பொதுத்துறை நிறுவனவங்களிடம் தற்போது இருப்பில் உள்ள நிதியை வாங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு 2.1 லட்சம் கோடி நிதி திரட்ட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட திட்டங்களும் இதில் அடங்கும். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, மத்திய அரசின் எண்ணம் ஈடேறாத சூழ்நிலை உருவாகியுள்ளது. வரி வருவாயும் இல்லை. இதனால், நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட முடிந்த அளவு நிதியை திரட்ட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த வகையில், பொதுத்துறை நிறுவனங்களிடம் உள்ள நிதி நிலையை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

தற்போது, கொரோனா ஊரடங்கால், பொதுத்துறை நிறுவனங்கள் மூலதன செலவினங்களை மேற்கொள்ள இயலவில்லை. இந்த நிதி எவ்வளவு உள்ளது என மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இதற்கான விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இதனால், அவற்றிடம் அதிக நிதி இருப்பு உள்ளது. இதை 2 வழிகளில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்று, டிவிடெண்ட் கேட்பது, மற்றொன்று, மத்திய அரசிடம் உள்ள பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்ள வலியுறுத்துவது.

பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசு பங்குகளை விற்ற தனியார் மயமாக்க துடித்து வரும் மத்திய அரசு, நீண்டகாலமாகவே இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசிடம் உள்ள பங்குகுளை பொதுத்துறை நிறுவனங்கள் திரும்ப வாங்கி வருகின்றன. இந்த வகையில், கடந்த 2019 - 20 நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசிடம் இருந்து 821.8 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெற்றன. இது அதே நிதியாண்டில் மத்திய அரசு பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்திருந்த 50,299 கோடியில் 1.6 சதவீதம்.

அதே ஆண்டு, திருத்திய மதிப்பீட்டின்படி நிதிசாராத பொதுத்துறை நிறுவனங்களின் டிவிடெண்ட் 48,256 கோடி கிடைத்துள்ளது. இது பட்ஜெட் மதிப்பீட்டை விட குறைவு. இதுபோல், 2018-19ல் டிவிடெண்ட் 3,052 கோடி, பட்ஜெட் மதிப்பீடு 52,495 கோடியாகவும், 2017-18ல் டிவிடெண்ட் 46,499 கோடி, பட்ஜெட் மதிப்பீடு 67,529 கோடியாகவும் உள்ளது. உபரியாக நிதி இருப்பதால், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய நடப்பு ஆண்டுக்கான டிவிடெண்டை முடிந்த அளவு விரைவாக வழங்குமாறு கோர முடிவு செய்துள்ளது.

Related Stories: