அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளை சார்ந்த 17 தொழில் நிறுவனங்கள் 15,128 கோடியில் தமிழகத்தில் முதலீடு

* முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

* 47,150 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 17 தொழில் நிறுவனங்கள் ₹15,128 கோடியில் தமிழகத்தில் முதலீடு செய்கின்றன. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் மூலம் 47,150 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.  கனரக வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்து பொருட்கள் உற்பத்தி என பல்வேறு துறைகளை சார்ந்த 17 புதிய தொழில் திட்டங்களை தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நேற்று தலைமை செயலகத்தில் கையெழுத்திடப்பட்டன.

அதன்படி, காஞ்சிபுரம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 2,277 கோடி முதலீட்டில் ஜெர்மனியை சேர்ந்த டைமில்லர் இன்டியா கமர்சியல் வேக்கில்ஸ் நிறுவனத்தின், கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கம்.பெரும் புதூரில் உள்ள நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில், 1,300 கோடி முதலீட்டில் பின்லாந்தை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின், கைப்பேசி உதிரி பாகங்கள் தயாரிப்பு விரிவாக்கம். ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 900 கோடி முதலீட்டில் ஜப்பானை சேர்ந்த பாலிமெட்டேக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின், செமிகன்டக்டர் சிப்ஸ் உற்பத்தி என 17 நிறுவனங்களின் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதில் முதல் 9 ஒப்பந்தங்கள் நேரடியாகவும், பிற ஒப்பந்தங்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டன.  இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறை முதன்மைசெயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அனீஷ் சேகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: