பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 191 பேர் தேர்வு எழுத வாழ்நாள் தடை

சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 191 பேர் வாழ்நாள் முழுவதும் போட்டித் தேர்வு எழுத முடியாத வகையில் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப கடந்த 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் செப்டம்பர் மாதம் 16ம் தேதி போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேற்கண்ட போட்டித் தேர்வுக்கான முடிவுகள் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக, அதாவது முறைகேடாக சிலர் மதிப்பெண்கள் பெற்றுள்ளது தெரியவந்தது. அதில் பலர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள். அதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் 200க்கும் மேற்பட்டவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீசில் தெரிவிக்கப்பட்டது. குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் முறைகேடுகள் நடந்துள்ளதும், தேர்வு எழுதியவர்கள் பலர் இதில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

அதன் பேரில் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் அதில் ஈடுபட்டவர்கள் குறித்து பட்டியல் தயாரித்தது.அதன்படி 191 பேர் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் போட்டித் தேர்வுகளை எழுத முடியாதபடி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

Related Stories: