தர்பூசணியில் பீர் தயாரித்து விற்பனை:சிறுவன் உட்பட இருவர் கைது,.. பெண் ரவுடிக்கு வலை

சென்னை: பூக்கடை, பாரிமுனை, பல்லவன் சாலை, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதை ஏற்றும் வகையில், தர்பூசணி பழத்தில் பீர் தயாரித்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் ராய் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முத்துசாமி பாலம் அருகே ஆட்டோவில் சந்தேக நிலையில் ஒரு சிறுவன் உள்பட 2 பேர் வந்தனர்.அவர்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் தர்பூசணி, ஈஸ்ட் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் இருந்தது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், இருவரும் பல்லவன் சாலை, காந்தி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூங்காவனம் (39) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் எனத் தெரியவந்தது.

மேலும், இப்பகுதியை சேர்ந்த பிரபல பெண் ரவுடி அறுப்பு லட்சுமி தலைமையில் ஒரு கும்பல் தர்பூசணி பழத்துடன் போதை பொருட்களை கலந்து ஒரு மிக்சியில் போட்டு ஜூஸ் தயாரித்து, அதை பீர் கலவையாக மாற்றி மேற்கண்ட பகுதிகளில் ஆட்டோ மூலம் விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்தது. பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை கைது செய்தனர். தர்பூசணி உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், தர்பூசணி பீர் தயாரிப்புக்கு மூளையாக செயல்பட்ட பெண் ரவுடியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: