தொழிற்சாலை கழிவு நீர் மீண்டும் காவிரியில் கலப்பு: குடிநீர் மாசுபடிவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஈரோடு: சாயப்பட்டறை தொழிற்சாலைகளின் கழிவு நீர் காவிரி ஆற்றில் மீண்டும்  கலந்து வருவதால் குடிநீர் மாசுபடிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி  உள்ளனர்.   ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும்  சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் சுத்தகரிப்பு செய்யாமல்  ஓடைகளிலும், சாக்கடைகளிலும் திறந்துவிடப்பட்டு வருகின்றது. இந்த தண்ணீர்  நேரடியாக காவிரியில் கலந்து வருவதால் உள்ளாட்சி அமைப்புகள் விநியோகிக்கும்  குடிநீர் மிகவும் மாசுபடிந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு  காரணமாக கடந்த 2 மாதங்களாக சாய,சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகள்  மூடப்பட்டிருந்ததால் காவிரியில் கழிவு நீர் கலக்காததால் அச்சமின்றி  குடிநீரை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வு  அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி  வருகிறது. இதையடுத்து ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  சாயப்பட்டறைகள், சலவைப்பட்டறைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள் இயங்க  ஆரம்பித்துள்ளன.

  இந்நிலையில் நேற்று காலை ஈரோடு  பிச்சைக்காரன்பள்ளத்தில் தொழிற்சாலைகளின் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடி  காவிரியில் கலந்தது. வெள்ளை நுரையுடன் வெளியேற்றப்பட்ட கழிவு நீரானது  மாநகராட்சிக்கு சொந்தமான வைராபாளையம் நீரேற்று நிலையம் அருகே காவிரியில்  கலந்ததால் குடிநீர் முற்றிலும் மாசுபடிந்தது. மேலும் காவிரி தண்ணீரில்  குளித்த பொதுமக்களுக்கு தோல் அரிப்பு, கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும்  கூறினர். எனவே மாசுகட்டுப்பாடு வாரியம் கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி  உள்ளனர்.

Related Stories: