லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தோருக்கு இன்று முதல் மணல் விற்பனை: தமிழக பொதுப்பணித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இணையதளம் மற்றும் செல்போன் செயலி ஆகியவற்றின் மூலம், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு மணல் இணைய சேவை www.tnsand.in என்ற இணையதளத்தையும், tnsand என்ற செல்போன் செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். இச்சேவை மூலம், மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சேவை மூலம் மட்டுமே பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை பூர்த்தி செய்து வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 4-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், மணல் முன்பதிவை தமிழக அரசு தொடங்கியது.

இதற்காக, வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் மணல் விற்பனைக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெறும். இதன்படி, ஆன்லைன் மணல் விற்பனைக்கான முன்பதிவு கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தோருக்கு இன்று முதல் மணல் விற்பனை செய்யப்படும் என தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. பொது ஊரடங்கு காரணமாக கடந்த 60 நாட்களாக மணல் குவாரிகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: