நிதி நெருக்கடியால் புதிய பணியிடங்களுக்கு தடை விதித்த நிலையில் அமைச்சர்களின் ஸ்பெஷல் பிஏ பதவி ஒழிக்கப்படுமா?

* ஓய்வுபெற்ற அதிகாரிகளால்

* தலைமை செயலகத்தில் கொந்தளிப்பு

சென்னை: நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு, அரசுப் பணிகளுக்கு புதிய பணியிடங்கள் நியமனத்திற்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டது. ஆனால், அமைச்சர்களின் ஸ்பெஷல் பிஏ-க்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளை வைத்துக் கொண்டு ேதவையற்ற நிதிச் சுமையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதனால், தலைமை செயலக அரசுப் பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், கொரோனா பிரச்னை தொடங்கியதில் இருந்து மேலும் மோசமான நிதி நிர்வாகத்தால் திணறி வருகிறது. தற்போது அரசின் செலவினங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.

இதனால் பயணங்களுக்கு தடை, விழா செலவுகள் ரத்து, கம்ப்யூட்டர், பர்னிச்சர் வாங்குவதை குறைத்தல் என 50 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்கும் திட்டத்தை அறிவித்தது. புதிய பணியிடங்களை நிரப்பவும் தடை போடப்பட்டது. ஆனால் 2011 அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கி இன்று வரை அனைத்து அமைச்சர்கள் அலுவலகத்திலும் கூடுதலாக ‘ஸ்பெஷல் பிஏ’க்கள் என்ற பதவி உருவாக்கப்பட்டு மாதம்தோறும்  அவர்களுக்கு லட்சக்கணக்கான தொகை சம்பளமாக செலவிடப்படுகிறது. 2011ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமைச்சர்களின் பிஏ-க்களை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி கட்டுப்படுத்தும் விதமாக ‘அண்டர் செகரட்டரி’ (சார்பு செயலாளர்) அந்தஸ்தில் உள்ளவர்கள் ஸ்பெஷல் பிஏ-க்களாக அமைச்சர்களுக்காக நியமிக்கப்பட்டனர்.

இதனால் ஒவ்வொரு அமைச்சருக்கும் மூன்று பிஏ-க்கள் என்ற நிலை உருவானது.   ஸ்பெஷல் பிஏ-க்களே அமைச்சர் அலுவலகத்தின் மிகப்பெரிய அதிகார மையமாக மாறிவிட்டனர். இவர்களின் பணியே அமைச்சர்கள் மற்றும் அவரது சகாக்களுக்கான ‘மேற்படி வேலை’களை செய்து கொடுப்பதுதான் என்று தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. இவர்களில் சிலர் அமைச்சர்களை ‘தாஜா’ செய்து தாங்கள் ஓய்வுபெற்ற பிறகும் ‘எக்ஸ்டன்ஷன்’ வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக அமைச்சர் அலுவலகத்திலேயே முகாம் போட்டுள்ளனர். ஒவ்வொரு ஸ்பெஷல் பிஏ-வுக்கும்  மாதம்தோறும் தலா 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் செலவாகிறது. உணவுத்துறை,  தொழிலாளர் நலத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சர்களிடம் இன்னும் ஸ்பெஷல் பிஏ-க்கள் பதவியில் உள்ளனர்.

அமைச்சர்களின் அலுவலகங்களைப் போலவே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,  பொதுப்பணித்துறை காவிரி செல், அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், ஆதிதிராவிடர் நலத்துறை, சுகாதாரத்துறை,  நெடுஞ்சாலைத்துறை (ஆசிய வளர்ச்சி வங்கி பிரிவு), இந்திய மருத்துவ துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையில் ஓய்வுபெற்ற தலைமைச் செயலக கூடுதல், இணை, துணை, சார்பு செயலாளர்களும், பிரிவு அலுவலர்களும் ஒப்பந்த அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள், ஆலோசகர்கள் என்ற தகுதியில் ஆண்டுக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். தலைமை செயலகத்தில்தான் இப்படி என்றால், மாநிலத்தின் மற்ற துறை அலுவலகங்கள், மாவட்ட அலுவலகங்களிலும் ஓய்வுபெற்ற பலர் இன்னமும் பணியில் உள்ளனர். இவர்களுக்காக மாதந்தோறும்  கோடிக்கணக்கான ரூபாய் அரசு செலவு செய்து வருகிறது.

அரசுத்துறைகளில் உள்ள உயர் அதிகாரிகளின் ஒப்பந்த நியமனம், எக்ஸ்டன்சனை ரத்து செய்தாலே, அரசுக்கு ஏற்படும் செலவினத்தில் பெரும் சுமை குறையும். கூடுதல் சுமையாக வலம் வரும் அதிகாரிகளை நீக்குவதால், அரசு நிர்வாகத்திற்கு எந்த சுணக்கமும் ஏற்படாது. குறிப்பாக அனைத்து  அமைச்சர்களின் ஸ்பெஷல் பிஏ-க்கள் பதவி ஒழிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு பெரும் நிதிச் சுமை குறையும். எனவே, பணி ஓய்வு பெற்றவுடன் ஒப்பந்த அடிப்படையில் பதவி நீட்டித்தல் அல்லது நியமனம் செய்தல் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், படித்த மற்றும் தகுதியுடைய பல இளைஞர்கள் அரசுப்பணியில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆனால், ஓய்வுபெற்ற அதிகாரிகளை பணியில் அமர்த்திக் கொண்டு தேவையற்ற நிதிச்சுமைக்கு அரசே வழிவகுத்துக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டும் உள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தலைமை ெசயலகத்தில் ‘லாபி’களை ஏற்படுத்திக் கொண்டு அதிகார மையமாக மாறிய அமைச்சர்களின் ஸ்பெஷல் பிஏ-க்கள் பதவி ஒழிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும், கொந்தளிப்பும் அரசு பணியாளர்கள் மத்தியில் உள்ளது. இது தொடர்பாக, அரசுப் பணியாளர் சங்கத்தினர் முதல்வரை சந்தித்து, அரசுப் பணியில் ஓய்வுபெற்றவர்களை அப்பணியில் இருந்து விடுவிக்க மனு கொடுக்க உள்ளனர்.

பணி முடிந்தும் பதவியிலிருக்கும்

ஸ்பெஷல் பி.ஏ.க்கள்

1.ராமச்சந்திரன்  (துணை முதல்வரின் சிறப்பு உதவியாளர்)

2.பால்துரை (தொழிலாளர் நலத் துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்)

3.ஆவுடையப்பன் (சுகாதாரத்துறையில் நாட்டு மருத்துவ

அதிகாரி)

4. இளங்கோவன் (சுற்றுலாத்துறையின் சீனியர் உதவியாளர்)

5. துரை (பொதுப்பணித்துறை)

6. பாலன் (சுகாதாரத்துறையில் சட்ட அதிகாரி)

7. செல்வராஜ் (ஆதி திராவிட நலத்துறை, சட்டப் பிரிவு அதிகாரி)

8. ரவிக்குமார் (உணவு அமைச்சரின் சிறப்பு உதவியாளர்)

9.பொன்னையன் (இந்து அறநிலையத்துறை அமைச்சரின் சிறப்பு உதவியாளர்)

10. ஜெயக்குமார் (தமிழக சுற்றுலாத்துறை

ஆலோசகர்)

11. வைத்திலிங்கம் (பொதுப்பணித்துறை)

Related Stories: