வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் அரைகுறையாய் முடிந்த கோட்டை அகழி தூர்வாரும் பணி: வறண்ட அகழியில் மீண்டும் முளைக்கும் முட்புதர்கள்

வேலூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்ட கோட்டை அகழியில் வறண்ட பகுதியிலும், கோட்டை சுவர்களிலும் மீண்டும் முட்புதர்கள், செடி, கொடிகள் முளைத்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கி.பி.15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர்களின் கீழ் ஆட்சி புரிந்த சின்னபொம்மு நாய்க்க மன்னரால் விரிவாக்கம் செய்யப்பட்ட ஜலகண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அகழியுடன் கூடிய கோட்டை கட்டப்பட்டது. தற்போது கோட்டையின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு அகழியில் மட்டும் தண்ணீர் உள்ள நிலையில் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு பகுதி அகழி வறண்டே காட்சி அளித்து வருகிறது. சுற்றுலா பயணிகள் பெருமளவில் வந்து செல்லும் வேலூர் கோட்டையை அதற்கேற்ப மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்த நிலையில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளிஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ஓரிரண்டு பணிகள் மட்டும் முடிந்துள்ளது. மற்ற பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ள நிலையில், விரைவில் தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகளும், தொல்லியல்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.அதேநேரத்தில் தூர்வாரப்பட்ட அகழியில் பணி சரிவர செய்யப்படவில்லை என்று தற்போது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக அகழியின் கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு பகுதியில் நடந்த பணி அரைகுறையாக முடிந்துள்ளதாகவும், தூர்வாரப்பட்ட பகுதி தற்போது கோடை வெயிலில் வறண்டுபோயுள்ள நிலையில் தூர்வாரப்பட்டது எந்தளவு என்பதை காட்டி நிற்கிறது.

தூர்வாரப்பட்ட பகுதியில் செடி, கொடிகள் முளைத்துள்ளது. தரைமட்ட அளவில் 80 ஆண்டுகளை கடந்த சுவர் ஒன்று அகற்றப்படாமல் அதன் மட்டத்துக்கு சேறும், சகதியும் மண்டி காய்ந்து தரைமட்டத்தை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது.

ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூர்வாரப்படும் அகழியில் தண்ணீர் நிரம்பி நிற்கும் அளவில் பணி நடைபெறும் என்றும், தண்ணீர் நிரம்பிய நிலையில் கோட்டையை படகில் சுற்றி வந்து பார்வையிடும் வகையில் படகுகள் விடப்படும் என்றும் வேலூர் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இப்போதுள்ள கோட்டை அகழியின் நிலை படகுகள் விடப்படும் என்ற நிலைக்கு கேள்விக்குறியை பதிலாக்கியுள்ளது. எனவே தண்ணீர் வற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் தூர்வாரி ஆழப்படுத்தி கோட்டையில் சமநிலையில் தண்ணீர் நிற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

மரம் வளரும் சுவர்கள்

வேலூர் கோட்டையின் வெளிப்புற, உட்புற மதில்களில் முளைத்திருந்த செடி, கொடிகள் கூட மீண்டும் அடர்த்தியாக வளர்ந்து சுவர்களை மறைத்து நிற்கின்றன. எனவே பல  கோடிகள் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பணியை குறைகள் ஏதுமின்றி முறையாக சீராக செய்து முடிக்கப்பட வேண்டும் என்று வேலூர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: