அனுமதியின்றி பட்டம் பறக்க விட்ட சென்னை கும்பலை பிடித்த போலீசார்: லட்சக்கணக்கில் பணம் பந்தயம் கட்டியது அம்பலம்

திருப்போரூர்: திருப்போரூரை அடுத்துள்ள தண்டலம் பகுதியில்  கழிவெளிப் பகுதியில் ஏராளமான கார்களில் வந்தவர்கள் காற்றாடி போட்டி  நடத்துவதாக திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து  போலீசார் அங்கு சென்ற காற்றாடி விட்டவர்களை வளைத்துப் பிடித்தனர். சுமார்  20க்கும் மேற்பட்ட கார்களில் 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து  வந்து தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடி போட்டி  நடத்துவது தெரிய வந்தது.  போலீசாரைக் கண்டதும் பலரும் காற்றாடிகளை போட்டு  விட்டு கார்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். மோட்டார் சைக்கிளில் வந்த  போலீசார் சிலரை மட்டும் மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான  காற்றாடிகள் மற்றும் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பண்டல்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. மேலும் இந்த போட்டிகளை நடத்திய நபர்களின் 8 கார்களும்  பறிமுதல் செய்யப்பட்டன.   இதைத்தொடர்ந்து காற்றாடி விட்டவர்களை போலீசார்  காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னையில் உள்ள  பல்வேறு தொழிலதிபர்களின் மகன்கள், அரசியல்வாதிகளின் மகன்கள்  ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

மேலும், இந்த காற்றாடி விடும் போட்டியில்  லட்சக் கணக்கில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்த  சம்பவத்தில் நேற்று இரவு வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. சென்னையில்  இருந்து உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் தொடர்ச்சியான விசாரணை மட்டும்  நடைபெறுவதாக போலீசார் கூறினர்.

Related Stories: