சீசன் தொடங்கிய நிலையில் மாங்காய்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் மா சீசன் தொடங்கிய நிலையில், கரும்புள்ளி நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், பெரியாம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் பரவலாக மா சாகுபடி செய்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் மா சீசன் தொடங்கிய நிலையில், மாங்காய்களின் மேல் கரும்புள்ளி நோய் சமீபகாலமாக பரவி வருவது. இதனால், மாம்பழத்திற்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் மாம்பழ சீசன் தொடங்கிய நிலையில், மாங்காய்களில் கரும்புள்ளி நோய் தாக்கி வருகிறது. கரும்புள்ளிகள் கொண்ட மாங்காய்களை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. தர்மபுரியில் கடந்த 2 நாட்களாக, மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மாங்காய்கள் உதிர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், அறுவடை செய்த மாவை சந்தைப்படுத்த முடியவில்லை. இதனால், நடப்பாண்டு எங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது,’ என்றனர்.

Related Stories: