மேட்டூர் அணையில் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் டெல்டாவில் தூர்வாரும் பணி கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையில் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக வரும் ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு வசதியாக அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டால் பாசனத்துக்கு தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல வசதியாக ஆறுகள், வாய்க்கால், வடிகால்வாய்களை தூர்வார 67.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தஞ்சாவூரில் 22.92 கோடியில் 165 பணிகள், திருவாரூரில் 22.56 கோடியில் 106 பணிகள் நாகையில் 16.72 கோடியில் 80 பணிகள், புதுக்கோட்டையில் 1.74 கோடியில் 9 பணிகள், திருச்சியில்1.76 கோடியில் 20 பணிகள், அரியலூரில் 16 லட்சம் செலவில் ஒரு பணிகள், கரூரில் 1.38 கோடியில் 11 பணிகள் என மொத்தம் 392 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, 38 பணிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 12ம் தேதிக்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை கவனிக்க வசதியாக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உட்பட 50 பேர் கொண்ட பொறியாளர்கள் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் இப்பணிகளை கண்காணிக்க 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்துக்கு வீட்டு வசதித்துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி,  நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திர மோகன், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, கரூர் மாவட்டத்துக்கு கால்நடைத்துறை செயலாளர் கோபால், திருச்சி மாவட்டத்துக்கு நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கார்த்திக், அரியலூர் மாவட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயகுமார் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் காவிரி பாசன கால்வாய்களில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை கவனிக்கின்றனர். இவர்கள், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசனுடன் ஒருங்கிணைந்து இப்பணிகளை கண்காணிப்பார்கள். அவர்கள், பாசன கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முறையாக நடந்ததா என்பது குறித்து முதல்வர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்புவார்கள். அவர்கள் அந்த பணி முடியும் வரை அங்கு கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>