ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் 15 மருத்துவர்களுக்கு தொற்று: வக்கீல் தரும் அதிர்ச்சி தகவல்

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 15 துறைகளின் முதன்மை மருத்துவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும் அதை அரசு மறைப்பதாகவும் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வக்கீல் ஜிம்ராஜ் மில்டன்  கூறியதாவது:  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார  பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இந்தநிலையில் ஸ்டான்லி  அரசு மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய 15 முதன்மை மருத்துவர்களுக்கு  கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருக்கும்  செய்தி நமக்கு கிடைத்துள்ளது.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் 15 முதன்மை மருத்துவர்களின்  நோய்த்தொற்று குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் தமிழக அரசால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில்  47 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியிருப்பதும் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் போல,  மருத்துவமனை நோய்த்தொற்றின் மைய பகுதியாக இருக்கிறது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பு வழங்குவதை  அரசு உறுதிப்படுத்த வேண்டும்.  

தமிழக அரசு கொரோனா வார்டு மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் கொரோனா அல்லாத பிற துறை வார்டுகளில் நேரடி சிகிச்சையளிக்கும்  மருத்துவர்களுக்கும் முறையான முழு உடல் கவசங்கள் வழங்க வேண்டும். கொரோனா நோய்தொற்று இல்லாத பிற  நோயாளிகளுக்கும்  பரிசோதனையை உடனே செய்யவேண்டும். ஆரம்பத்தில், கொரொனா நோய்த்தொற்று உறுதியான மருத்துவர்கள் குறித்து வெளிப்படையாக அறிவித்து  வந்தது போலவே தினசரி செய்திக்குறிப்பில் மருத்துவர்கள் நோய்த்தொற்று குறித்தும் தனி அட்டவணை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: