வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை13 மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்

சென்னை: தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும். அதனால் பொதுமக்கள் வெளியில்  வரக்கூடாது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் கரையைக் கடந்த பிறகு தற்போது  தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவுகிறது. இதனால் வெப்ப சலனமும் நீடித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வளிமண்டல மேலடுக்கு  சுழற்சியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதில் பேச்சிப் பாறையில் அதிகபட்சமாக 123  மிமீ மழை பெய்துள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும்  இடியுடன் கூடிய கனமழை பெய்யும். இந்நிலையில், வட தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பம் 41 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை  உயர்ந்து அனல் காற்று வீசும். அதனால் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் வர  வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

சென்னையை பொருத்தவரையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். காலையில் 32 டிகிரி செல்சியஸ் அளவில் தொடங்கும் வெயில் மதியம் 1  மணி அளவில் 42 டிகிரி செல்சியஸ் அளவில் உயர்ந்து  படிப்படியாக குறையத் தொடங்கும். இரவில் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் அளவில்  இருக்கும். இதன் தொடர்ச்சியாக வட தமிழகத்தில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர்,  திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும். இது போல் வெப்பம் அதிகரிக்கும்  தன்மை உயர்ந்து 25 மற்றும் 26ம் தேதிகளில் வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>