அம்பன் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2.5 லட்சம் நிவாரணம்; ம‌ம்தா பானர்ஜி அறிவிப்பு: பிரதமர் மோடி நாளை ஆய்வு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் வடக்கு, வடகிழக்கு நகர்ந்து மேற்குவங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா இடையே நேற்று கரையை கடந்து அசாமை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இன்றைய நிலையில் புயலால் மேற்குவங்கத்தில் 12 பேர் இறந்தனர். பலர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன.

பலத்த காற்று மற்றும் பலத்த மழையால் கொல்கத்தா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின்கம்பங்கள், தொலைபேசி கோபுரம், போக்குவரத்து சிக்னல்கள், பழைய கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சுமார் 5,200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மாநில கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட முதல்வர் மம்தா, ‘கொல்கத்தா, ஹவுரா, ஹூக்லி, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் சாய்ந்ததால் இந்த இறப்புகள் நடந்துள்ளன. புயலால் ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.

பெரும் புயல் வீசுவதால் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. கொல்கத்தாவில் மூன்று மணி நேரத்தில் 180 மி.மீ மழை பெய்தது. பல பகுதிகள் நீரில் மூழ்கியதால் தென்வங்காளத்தின் பல மாவட்டங்களில் சாலைகள், மின்சாரம், பாலங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் முற்றிலும் முடங்கின. ஏற்கனவே ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். இதனால், உயிர் இழப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. புயல் தாக்கப்படுவதற்கு முன்பு மேற்குவங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் இருந்து 6.58 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

24 லட்சம் மக்கள் வங்கதேசத்தில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய இரு மாநிலங்களிலும் தேசிய, மாநில பேரிடர் குழுவின் 41 அணிகள் களப்பணியில் உள்ளன. இந்நிலையில் மேற்குவங்கத்தில் அம்பன் புயலுக்கு 72 பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்; மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 72 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை தகவல்கள் வந்துள்ளன.

பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என கூறினார். இதனிடையே அம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பிரதமர் பிரதமர் மோடி நாளை ஆய்வு செய்ய உள்ளார். ஹாலிகாப்டர் மூலம் புயல் சேதங்களை பிரதமர் நாளை பார்வையிட உள்ளார்.

Related Stories: