மத்திய வரி வருவாயில் இருந்து மே மாத பங்கீட்டு தொகை விடுவிப்பு; தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி ஒதுக்கீடு

டெல்லி: மாநிலங்களுக்கு நிதி பகிர்வின் அடிப்படையில் தமிழகத்துக்கு 1,928 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்துக்கு 8,255 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் பெரும்பாலானவற்றை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையாக 28 மாநிலங்களுக்கு ரூ.5005.25 கோடி ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மே மாதம் நிதிப்பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 28 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ. 46,038.70 கோடியை விடுவித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த தொகை மொத்தம் உள்ள 28 மாநிலங்களுக்கு பிரித்து ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசூலிக்கப்படும் வரியை ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் மே மாத பங்கீட்டு தொகையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் பீகார் மாநிலத்திற்கு ரூ.4,631 கோடி, பிரதியை ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திற்கு ரூ.3,630 கோடியும் ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. 28 மாநிலங்களில் உத்தரபிரதேச மாநிலத்திக்கிற்கு தான் அதிக பங்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் இன்று காலை தெரிவித்திருந்தது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: