60 நாட்களாக ரணமான வாழ்க்கை ஊரடங்கால் ஒளி இழந்த ஒகேனக்கல்: பிழைப்புக்கு வழியில்லாமல் பரிதவிக்கும் தொழிலாளர்கள்

பென்னாகரம்:  கொரோனா ஊரடங்கால் 60நாட்களுக்கும்  மேலாக சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் அங்குள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என்று நூற்றுக்கணக்கானோர் வருவாய் இழந்து குடும்பம் நடத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்வது ஒகேனக்கல். குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி, அங்கிருந்து கரைபுரண்டு ஓடி, தமிழகத்தில் அருவியாய்  கொட்டி  ஆர்ப்பரிக்கும் இடம் தர்மபுரி மாவட்டத்தின் ஒகேனக்கல். அருவியோடு ஐவர்பாணி, மான்பூங்கா, முதலைப்பண்ணை, சினிபால்ஸ் என்று இங்கு கண்ணுக்கு விருந்தளிக்கும் இடங்கள் ஏராளம். இப்படி சிறப்பு வாய்ந்த ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா,ஆந்திரா,கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரள்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா பீதியால், கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, அருவிகளுக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சுற்றுலா பயணிகள் வருகையின்றி, ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனையடுத்து, ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழும் பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள் தற்போது எந்தவித வருவாயும் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 62 நாட்களாக நீடிக்கும் ஊரடங்கால், ஒகேனக்கல்லில் வசிக்கும் தொழிலாளர்கள் வருவாய் எதுவுமின்றி, குடும்பம் நடத்தவே முடியாமல் திணறி வருகின்றனர். அரசு வழங்கிய இலவச ரேஷன் அரிசியும், நிவாரணத் தொகை ₹ஆயிரமும் சில நாட்களுக்கு வயிற்றுப்பசி போக்க உதவியது. ஆனால் அதைத் தொடர்ந்து பலநாட்களாக பட்டினியால் பரிதவித்து வாழ்க்கை போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே பரிவுடன் எங்களுக்கு அரசு உதவ வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட ஒட்டு மொத்த தொழிலாளர்களின் குமுறலாக எதிரொலிக்கிறது.

Related Stories: