கொரோனா பரவலை தடுக்க சிறப்பான நடவடிக்கை: முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து ICMR தொற்று நோய் இயக்குநர் பாராட்டு...!

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது. முதல் ஊரடங்கை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு  அறிவித்தார். அதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. எனினும் இந்திய அளவில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையே,  இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் 2ம் இடத்தில் இருக்கும் தமிழகம் ஊரடங்கு நீட்டிப்பை சில தளர்வுகளுடன் அறிவித்தது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், மே 17ம் தேதியில்  இருந்து 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,  கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஏற்கனவே நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடரும். தளர்வுகள் ஏதும் இல்லை.

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர்,  நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கலாம். மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல்  தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு எடுத்து வரும் முன்னோடி நடவடிக்கைகளுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுன்சிலை சேர்ந்த தேசிய தொற்று நோய்  நிறுவன இயக்குநர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் பிரதீப் கௌர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். அப்போது, கொரோனா குறித்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேட்டறிந்தனர். அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழக பாதிப்பு:

இதற்கிடையே, தமிழகத்தில் இதுவரை 11,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4406 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில்  உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: