ஜூன் மாதத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியா?: தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்...பண்டிகை கட்டணம் நிர்ணயம்

சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மார்ச் மாதம் 25ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் தேசிய ஊரடங்கை அறிவித்தது. முதல் ஊரடங்கை பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அறிவித்தார். அதையடுத்து இந்தியா முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. எனினும் இந்திய அளவில் கொரோனா பாதிப்பு  90 ஆயிரத்தை எட்டி உள்ளது. இதற்கிடையே, கடந்த 12-ம் தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, 4-ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கு ஏற்றார் போல், நீட்டிக்க அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் 3ம் இடத்தில் இருக்கும் தமிழகம் ஊரடங்கு நீட்டிப்பை சில தளர்வுகளுடன் அறிவித்தது. அதாவது மே 17ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அதே சமயம் ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புள்ள சென்னை உள்பட 12 மாவட்டங்களில் தளர்வு அறிவிக்கப்படவில்லை. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு மட்டும் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன. மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கலாம். மாவட்டத்திற்குள் நோய் தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல  இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு முடிந்தப்பின் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. பண்டிகை நாட்களுக்கான கட்டண விகிதத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரசு அறிவித்த பின்னரே பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதன் மூலம் ஜூன் மாதத்தில் பொதுப்போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிகிறது.

Related Stories: