10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க வேண்டும்: திமுக இளைஞரணி, மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி, மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இரு அணிகளின் இணை, துணை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் இரு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் பங்கேற்று தங்களின் கருத்துக்களை கூறினர். சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.வும் பங்கேற்று தங்களின் கருத்துக்களை எடுத்துக்கூறினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘இ வித்யா தீஷா’ திட்டத்தின் கீழ் ‘ஒரே தேசம்-ஒரே கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்துள்ளதன் மூலம் கொரோனா  சூழலைப் பயன்படுத்தி புதிய கல்விக்கொள்கையைக் கொள்ளைப்புறம் வழியாகப் புகுத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.  கொரோனா கால ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுப் பசி,  பட்டினியில் தவித்த மக்களை மத்திய, மாநில அரசுகளே கைவிட்ட நிலையில், அவர்களை  தன் ‘ஒன்றிணைவோம் வா’ உதவிகள் வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்குத் தேவையான உணவு, உணவுப் பொருட்கள், மருந்து-மாத்திரைகள், நிதியுதவியை உடனுக்குடன் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து, வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை, பிடிப்பை அவர்களுக்கு ஏற்படுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

ஊரடங்கு முடிந்து அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்பட்டு பத்து முதல் 15 வேலை நாட்கள் பள்ளி இயங்கியபிறகு இந்த பொதுத்தேர்வை நடத்துவது என்பதே சரியான முடிவாக இருக்கும். எனவே 10ம் வகுப்புத் தேர்வுகளையும், ஜூன் 2ல் நடக்கவுள்ள 12ம் வகுப்பு தேர்வையும், ஜூன் 4ம் தேதி நடக்கவுள்ள 11ம் வகுப்புத் தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: