டெல்டா மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை மின்னல் தாக்கி விவசாயி பலி: 500 ஏக்கர் வாழை சேதம்

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி விவசாயி பலியானார். 500 ஏக்கர் வாழை சேதமானது. வங்ககடலில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றுமுன்தினம் அம்பன் புயலாக மாறியது. அது நேற்றுமுன்தினம் நள்ளிரவு தீவிர புயலாக மாறியது. வங்க கடல் பகுதியில் கடும் சீற்றம் நிலவியது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இரவில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.

ஒரத்தநாடு பகுதியில் சூறாவளி காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் ஆங்காங்கே வயல்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது. 500 ஏக்கருக்கு மேல் நெற்கதிர்கள் பாதிக்கப்பட்டது. மேலும் ஒரத்தநாடு பகுதியில் உள்ள 200 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. பல கிராமங்களில் நேற்று மதியம் தான் மின் விநியோகம் செய்யப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடி மின்னலுடன் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழை மற்றும் சூறைக் காற்றில் ஆலங்குடி, கறம்பக்குடி பகுதியில் 200 ஏக்கரில் பயிரிட்டிருந்த வாழை மரங்கள் சேதடைந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

விவசாயி பலி: விராலிமலை அடுத்த வானதிரையான்பட்டியை சேர்ந்த விவசாயி சண்முகம் (50). நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தார்.  இதே போல் கரூர், பெரம்பலூர், திருச்சியில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதமானது. வையம்பட்டி அருகே முகவனூர் வடக்கு, தெற்கு பகுதிகளில் வீசிய சூறாவளி காற்று, மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஏக்கர் சம்பா 36, 45 ரக நெற்கதிர்கள் சாய்ந்தன.

ராமேஸ்வரம் கடலில் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் கடல் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகள் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய சூறைக்காற்று காரணமாக, கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரம், நரிக்குளம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

Related Stories: