ரூ.1,86,650 கோடி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்: பொருளாதார அறிவிப்பு குறித்து ப.சிதம்பரம் ட்விட்

சென்னை: பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ரூ.1,86,650 கோடி என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என அவர் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளநிலையில், அதனை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் வரையிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த அறிவிப்பில், ‘சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அடமானமாக எதுவும் வாங்கப்படாமல் கடன் வழங்க, 3 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

விவசாய உள்கட்டமைப்புக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், எதிர்கட்சிகள் வலியுறுத்திவந்த, ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில், நிதியமைச்சரின் அறிவிப்பை ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில் கூறியதாவது; பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான். ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: