திருப்பூரில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

சென்னை: திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், நாகை, நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பேரில் 9 இடங்களில் மத்திய அரசு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டிற்கு ஒரே நேரத்தில் 6 அரசு புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி பெறுவது ஒரு வரலாற்று சாதனை ஆகும். இதையடுத்து ரூ1200 கோடி செலவில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி அமைக்க வருவாய்த்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி மார்ச் 1ம் தேதி ராமநாதபுரம், விருதுநகர் மருத்துவகல்லூரி கட்டுமான பணிக்கும், தொடர்ந்து மார்ச் 4ம் தேதி கிருஷ்ணகிரியிலும், மார்ச் 5ம் தேதி நாமக்கல் மற்றும் திண்டுக்கல்லிலும், மார்ச் 7ம் தேதி நாகையிலும் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். 8ம் தேதி திருவள்ளூரிலும், 14ம் தேதி திருப்பூரிலும் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவலால் அந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

 இந்நிலையில், இன்று, திருப்பூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை 19-ம் தேதி திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: