கொரோனா கால நிவாரண கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மத்திய, மாநில அரசை கண்டித்து நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: முத்தரசன்

சென்னை: கொரோனா கால நிவாரண கோரிக்கைகளை அலட்சியப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  கொரோனா கால நெருக்கடிகளை சமாளிக்க தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா ₹10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டத்தை சீர்குலைக்கக் கூடாது. நகர்ப்புற மக்களுக்கு தனியாக வேலை உறுதியளிப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும்.

 ஒரு மனித வேலை நாள்  என்பது 8 மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தும் திட்டத்தை கை விட வேண்டும். சிறு,குறு தொழில்களுக்கு புத்துயிரூட்டும் வகையில், கடன்களின் மூன்று மாத தவணைத் தொகையினை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் கடன்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். கொரோனா காலத்தில் ஏற்பட்ட விளை பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெற்று வரும் முதியோர், விதவையர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர் போன்றோருக்கு கொரானா கால நிவாரண நிதியும், உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை மாவட்ட, வட்டார, கிளைகள் அளவில் உள்ள கட்சி அலுவலகங்கள், தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் அவரவர் வீடுகளின் முன்பு நடத்த வேண்டும். ஆர்ப்பாட்ட மையங்களில்  கூட்டம்  கூடுவதைத் தவிர்க்க வேண்டும். தனிநபர் இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, ஊரடங்கு விதிமுறைகள் அனுசரித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டும். மக்கள் நலன்களை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரிக்க வேண்டும்.

Related Stories: