விதியை மீறிய பிரபல ஓட்டலுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

தண்டையார்பேட்டை: சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சில கட்டுப்பாடுகளுடன் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இடங்களில் கட்டுப்பாடுகளை மீறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் அருகில் உள்ள பாண்டியாஸ் என்கிற பிரபல அசைவ ஓட்டலில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலுடன் வியாபாரம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

அதன்பேரில், கொருக்குப்பேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார், மாநகராட்சி உரிமம் ஆய்வாளர் சீனிவாசன், ஜோசப் மற்றும் வரி மதிப்பிட்டாளர் கோபி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தபோது, மேற்கண்ட ஓட்டலில் கூட்ட நெரிசலுடன் வியாபாரம் நடப்பது தெரிந்தது.  இதையடுத்து, ஓட்டல் உரிமையாளரை எச்சரித்த அதிகாரிகள், உடனடியாக அந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர். இதேபோல், மண்ணப்ப தெருவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒரு தேநீர் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: