ஊரடங்கின்போது மூடியிருந்த டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் கொள்ளை குறித்து அரசு சார்பில் விசாரணை கமிஷன்

* பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை: டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுப்பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைத்து, விசாரிக்கவேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத்தலைவர் பாலுசாமி, மாநில பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:  தமிழகத்தில் மதுபான விற்பனை கடைகள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டன. பின்னர் கடைகளில் உள்ள சரக்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன. மூடப்பட்ட சில டாஸ்மாக் கடைகள், திருடர்களால் உடைக்கப்பட்டு, மது பாட்டில்கள் திருட்டு போய் உள்ளன.

சில இடங்களில் பார் உரிமையாளர்கள், அரசியல் செல்வாக்குள்ளோர், புரோக்கர்கள் கூட்டாக சேர்ந்து பணியாளர்களை வற்புறுத்தி கடைகளை திறந்துள்ளனர். காவல்துறையை சேர்ந்த சிலரும் பாட்டில்களை எடுத்துள்ளனர். இதற்கு டாஸ்மாக் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மது பாட்டில் குறைந்ததற்குரிய தொகையை 50 சதவீத தண்டத்தொகை, வட்டியுடன் சேர்த்து செலுத்த டாஸ்மாக் நிர்வாகம் பணியாளர்களுக்கு ஆணையிட் டுள்ளது. பணியாளர்களை மட்டும் இதில் பலிகடா ஆக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.

குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம், உயர்மட்ட விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.  அவசரப்பட்டு குற்றமற்ற பணியாளர்களை தண்டிக்க கூடாது. இதுதொடர்பாக விசாரணை கமிஷன் நியமிக்கக்கோரி, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரை  சந்தித்து வலியுறுத்தப்படும்.  இவ்வாறு கூறியுள்ளனர்.

Related Stories: