ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலில் காயத்துடன் தவித்த சிறுத்தையை மீட்டு சிகிச்சை

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சாலையில் படுத்து கிடந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவை உணவிற்காக மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது. இது போன்று வரும் விலங்குகள் வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு போன்றவைகளை கொல்வதுடன் சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கி விடுகிறது. இதனால், நாளுக்கு நாள் மனித விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் கவர்னர் மாளிகை வளாகத்திற்குள் ஒரு சிறுத்தை காலில் காயத்துடன் நடக்க முடியாமல் நடந்துச் சென்றுள்ளதை அங்குள்ள ஊழியர்கள் பார்த்துள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அந்த சிறுத்தை கார்டன் தோடர் மந்து செல்லும் சாலையில் நேற்று முன்தினம் நடக்க முடியாமல் அவதிப்பட்டு கிடந்தது. இந்த பகுதி தாவரவியல் பூங்காவின் அருகில் உள்ள பகுதியாகும்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அதை வனப்பகுதிகளுக்குள் விரட்ட முயற்சித்து எவ்வித பலனும் ஏற்படவில்லை. நேற்று காலை வனத்துறை ஊழியர்களுக்கு பூங்கா ஊழியர்கள் தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் அதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கால்நடை மருத்துவரை அணுகினர். ஆனால், அவர்கள் வெகு நேரம் வராத நிலையில், சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். பின்னர் ஊட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிறத்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதன் காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கரடி அல்லது வேறு விலங்குடன் சண்டையிட்டதில் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

Related Stories: