4-ம் கட்ட ஊரடங்கின் புதிய நெறிமுறைகள் என்னென்ன?: மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியீடு...பெரும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 3 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 52 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 17ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தி  இந்தியா உலகளவில் 11-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, மே 17ம் தேதிக்கு பிறகான திட்டம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8  மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க ரூ.20 லட்சம் கோடிக்கான சலுகையை அறிவிக்கிறேன். ரூ..20 லட்சம் கோடி நிவாரண நிதி குறித்து மத்திய நிதி அமைச்சகம் நாளை விரிவான விளக்கம் அளிக்கும். நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு  நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும்.  இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும் என்றார். இந்நிலையில், 4-ம் கட்ட ஊரடங்கு புதிய நெறிமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிடுகிறது. இந்த அறிவிப்பின் மூலம், என்னென்ன கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். புதியதாக எந்த போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரியவரும். சுமார் 52 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால் 4-ம் கட்ட ஊரடங்கு எந்த நிலையில் இருக்கும் என பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories: