சட்டமன்ற தேர்தலுக்காக கீழ்த்தரமான அரசியல்; கொரோனா பாதிப்புகளை முதல்வர் மம்தா முறையாக கையாளவில்லை...பாஜக விமர்சனம்...!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மம்தா பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என பாஜக எச்சரித்துள்ளது. டெல்லி: வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்துவர மேற்குவங்க அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் மீண்டும் மே 17ம் தேதி  வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் அந்த தேதி வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து, மத்திய உள்துறை அறிவுறுத்தலின்படி வெளிமாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகளை மாணவர்கள் என பலரை அழைத்து வர மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுதிய கடிதத்தில், பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை திரும்ப அழைப்பது குறித்து மேற்குவங்க அரசு, போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை. ரயில்வே துறை இயக்கும் சிறப்பு ரெயில்களை மாநிலத்திற்குள் மேற்கு வங்க அரசு அனுமதிக்கவில்லை. இது மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அநீதியாகும். இது அவர்களுக்கு மேலும் கஷ்டங்களை உருவாக்கும். கொரோனா வைரஸ் சோதனையில் மக்கள் தொகையின் விகிதத்தில் மிகக்குறைந்த பரிசோதனை விகிதத்தையே மேற்குவங்கம் கொண்டுள்ளது. அங்கு இறப்பு விகிதமும் 13.2 சதவீதம் உயர்வாக உள்ளது என்று மம்தா மீது அமித்ஷா குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தபோது, மம்தாவை கடுமையாக விமர்சனம் செய்தார். கொரோனா பாதிப்புகளை மேற்கு வங்கத்தில் மம்தா முறையாக கையாளவில்லை. கொரோனாவை பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதைவிடுத்து, எண்ணிக்கையை மறைத்து வருகிறது. உண்மை வெளியே தெரிந்ததால், அதிகாரிகளை முதல்வர் மம்தா மாற்றி வருகிறார். மத்திய அரசின் உதவிகளை முதல்வர் மம்தா ஏற்க மறுக்கிறார்.

முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, கீழ்த்தரமான அரசியல் செய்து வருகிறார். கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் மோடி வென்று விட்டால், அது பாஜகவுக்கு சாதகமாகி, சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அவருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு, வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை முறையாக கையாளாத மம்தா கட்சி, சட்டமன்ற தேர்தலில் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். பிரசாந்த் கிஷோரால் கூட திரிணாமுல் தோல்வியை தடுக்க முடியாது என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Related Stories: