ஏழை மக்களுக்கு இன்றைய தேவை கடன் இல்லை பணம்; மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவ ராகுல் காந்தி கோரிக்கை

டெல்லி: மக்களுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவுமாறு மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். வங்கிக் கணக்கு மூலம் மக்களுக்கு பணம் தர வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 86,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 2,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 13ம் தேதி முதல் சலுகைகளைஅறிவித்து வருகிறார். கடந்த 13ம் தேதி, 5.94 லட்சம் கோடி, நேற்று முன்தினம், 3.16 லட்சம் கோடியில் சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. நேற்று, 3வது கட்டமாக 1,63,343 கோடியில் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் டெல்லியில் காணொலி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய ராகுல்காந்தி கூறியதாவது; கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸால் முன்மொழியப்பட்ட குறைந்த பட்ச வருமான திட்டத்தை எடுத்துரைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 72,000 ரூபாய் வருமான உதவி சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதேபோன்ற திட்டத்தை கொண்டு வருமாறு மத்திய அரசை வலியுறுத்தினார். ஒரு தாய் தனது குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எதையும் செய்வதைப் போலவே, அரசாங்கமும் மக்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை போட வேண்டும். நாம் அவ்வாறு செய்யாவிட்டால், இது ஒரு பேரழிவு பிரச்சினையாக மாறும் பிரதமர் பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஏழைகளுக்கு வங்கியில் பணம் போடுங்கள் என கூறினார்.

Related Stories: