உ.பி. நடத்த சாலை விபத்து மிகவும் துயரமானது: புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்

டெல்லி: சமீப நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவும் டிரக்கிலும் திரும்பும் வழியில் பல்வேறு விபத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து உத்திரப்பிரதேசம் நோக்கி புலம்பெயர் தொழிலாளர்கள் லாரியில் சென்று கொண்டிருந்தனர். உத்தரபிரதேச மாநிலம் அவுரையா என்ற இடத்தில் அதிகாலை 3.30 மணிக்கு சென்றபோது, தொழிலாளர்கள் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிக் கொண்டதில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 24 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 15 முதல் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்ற வருகின்றனர். இவர்கள், பீகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உ.பி. 24 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசம் அவ்ரயாவில் நடைபெற்ற சாலை விபத்து மிகவும் துயரமானது. நிவாரணப் பணிகளில் அரசு மும்முரமாக உள்ளது. சாலை விபத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

உ.பி.அரசு நிவாரணம்  அறிவிப்பு:

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் அவ்ரயாவில் 2 லாரிகள் மோதிய விபத்தில் உயிரிழந்த 24 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் விபத்தில் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Related Stories: