திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு லாரியில் சென்ற 156 தொழிலாளர் மீட்பு: டிரைவர்கள் உட்பட 3 பேர் கைது

பெருந்துறை: திருப்பூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு கண்டெய்னர் லாரியில் செல்ல முயன்ற 156 வடமாநில இளைஞர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதுதொடர்பாக, ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் கானாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நசீர் அலி (28). இவர், உத்தரப்பிரதேசத்தில் இருந்து எலக்ட்ரிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களூர் சென்று இறக்கிவிட்டு அங்கிருந்து திருப்பூர் வந்தார். ஊத்துக்குளி, காங்கயம், திருப்பூர் பகுதிகளில் உள்ள 81 வடமாநில இளைஞர்கள் சொந்த ஊரான உத்தரப்பிரசேதம் செல்ல தயாராக இருந்தனர். வாடகை பேசி அவர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஈரோடு மாவட்ட எல்லையான கள்ளியம்புதூர் சோதனைச்சாவடியில் பெருந்துறை போலீசார், கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, லாரிக்குள் 81 வடமாநில இளைஞர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

.

அவர்கள் அனைவரிடமும் பெயர், முகவரிகளை சேகரித்தனர். பின்னர், அனைவரையும் அதே லாரியில் ஊத்துக்குளி, காங்கயம், திருப்பூரில் இறக்கிவிட்ட பின், லாரி ஓட்டுநர் நசீர் அலியை போலீசார் நேற்று கைது செய்தனர். லாரி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் புலவர்பாளையம்  சோதனைச்சாவடியில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் லாரியில் 75 பேர்  இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலத்தை  சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், திருப்பூரில் இருந்து உத்தரபிரதேசம்  செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர்  முகமத் பேரிஸ் (25),  முகமீர் (22) ஆகிய இருவர் மீது ஊத்துக்குளி  போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். லாரியில் பயணம் செய்த தொழிலாளர்கள் அனைவரும் அவர்கள் வேலை  பார்த்த திருப்பூரில் உள்ள நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி  வைக்கப்பட்டனர்.

Related Stories: