மதுபிரியர்களின் சொர்க்கவாசல் மீண்டும் திறப்பு: சென்னை, திருவள்ளூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடங்கியது...!

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடங்கியது. ஊரடங்கை தளர்த்தி அறிவித்தபோது, வருவாய் பற்றாக்குறையை  காரணம் காட்டி டாஸ்மாக் கடைகளை கடந்த 7ம் தேதி தமிழக அரசு திறப்பதாக அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னை  மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர்த்து மாநிலம் முழுவதும்  பல்வேறு கட்டுபாடுகளில் 5,300 கடைகளில் 3,700 கடைகள் திறக்கப்பட்டன.

ஆனால், டாஸ்மாக் கடைகளில் எந்தவித கட்டுப்பாடும் முறையாக கடைபிடிக்கவில்லை. சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. இதனால் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவானது. இதைதொடர்ந்து, ஊரடங்கு  விதிகளை மீறி கூட்டம் கூட்டமாக குவிந்ததாக கூறி டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை எனக்கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் கடைகள் செயல்படுகிறது. பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும்  திருவள்ளூர் மாவட்ட  எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாக உள்ள கடைகளில் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஏற்றார்போல் இந்த டோக்கன்  வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிறு முதல் திங்கள் வரை வாரத்தின் 7 நாட்களில் கிழமை வாரியாக வண்ண டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.

சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள் கடைக்கு வந்து மது வாங்கிக் கொள்ளலாம். டோக்கனில் கடை எண் மற்றும் நேரம்  குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் தான் வந்து மது வாங்க வேண்டும். மற்ற நேரங்களில் வந்தால் மது வழங்கப்படாது என்று டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: