பெண் கொலையில் தேடப்பட்ட வேன் ஓட்டுநர் தற்கொலை: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு

திருப்போரூர்: திருக்கழுக்குன்றம் பெண் கொலையில் தேடப்பட்ட, வேன் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவர் தனியார் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றி வரும் வேன் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர், தொழிலாளர்களை ஏற்றி வருவதற்காக திருக்கழுக்குன்றம் அருகே உள்ள நெரும்பூர் கிராமத்திற்கு செல்வது வழக்கம். அப்போது, அதே ஊரை சேர்ந்த ஷோபனா (34) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ஷோபனாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இறந்து விட்டார். இவர்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் நெரும்பூர் கிராம பாலாற்றில் ஷோபனாவின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, ஷோபனாவின் கையில் பாஸ்கர் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, பாஸ்கர் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தையூர் கிராமத்தை சேர்ந்த ஓட்டுனர் பாஸ்கர் என்று தெரியவந்தது. இதையடுத்து திருக்கழுக்குன்றம் போலீசார் தையூர் கிராமத்திற்கு வந்து பாஸ்கரின் வீட்டில் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் பாஸ்கர் வீட்டில் இல்லாததால் அவரை காவல் நிலையத்திற்கு வருமாறு சொல்லி விட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று தையூர் காட்டுப்பகுதியில் ஒரு வாலிபர் தூக்குப் போட்ட நிலையில் கிடப்பதாக கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கேளம்பாக்கம் போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில் திருக்கழுக்குன்றம் போலீசார் தேடி வந்த பாஸ்கர் என்பது தெரியவந்தது. பாஸ்கரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷோபனா வலியுறுத்தி வந்ததும் அதற்கு பாஸ்கர் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் அவரை கொலை செய்து விட்டு போலீசார் தேடியதால் பயந்து போய் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ரீதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: