ஏழுமலையானை பார்க்க முடியாவிட்டால் என்ன? திருப்பதி லட்டு, வடைவிற்பனைக்கு வந்தாச்சு!

திருமலை: ஊரடங்கால் ஏழுமலையான் தரிசனம் கிடைக்கா விட்டாலும் கட, நெய்வேத்தியம் செய்யப்படும் லட்டு, வடை பிரசாதம் விற்பனைக்கு வந்துள்ளது.திருப்பதி என்றாலே லட்டுதான் நினைவுக்கு வரும். திருப்பதிக்கு வரும் யாரும் இதை வாங்காமல் செல்ல மாட்டார்கள். கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச் 20ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. பக்தர்கள் இல்லாவிட்டாலும், சாமிக்கு வழக்கமாக நடக்கும் நித்திய பூஜைகள் நடக்கின்றன. தினமும் கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. இதை பக்தர்களின் தரிசனத்துக்காக தேவஸ்தான டிவி.யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  

இந்நிலையில், கல்யாண உற்சவம் மற்றும் இதர பூஜைகளுக்காக செய்யப்படும் லட்டு, வடை பிரசாதங்கள் தினமும் திருமலையில் உள்ள கவுன்டரில் இதுவரை விற்கப்பட்டு வந்தது. இது பக்தர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால், திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இவற்றை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, இந்த அலுவலகத்தில் 500 கல்யாண உற்சவ லட்டு, வடை பிரசாதங்கள் நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இவற்றை யார் வேண்டுமானாலும் வாங்கலாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: