பொருளாதார நிதித் திட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் எடுத்துள்ள முடிவுகள் துணிச்சலானவை; அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு

டெல்லி: பிரதமரின் 20 லட்சம் கோடி பொருளாதார நிதித் திட்டத்தின் கீழ், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எடுத்துள்ள முடிவுகள் உறுதியானவை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டி உள்ளார். நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் 20 லட்சம் கோடி பொருளாதார நிதித் திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்தார். அதன்படி

முதற்கட்ட தற்சார்பு இந்தியா என்ற பொருளாதார நிதியுதவி தொகுப்பு குறித்த விவரங்களை வெளியிட்டார்.

அதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் 3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என பல முக்கியமான திட்டங்களை வெளியிட்டார். இந்நிலையில் பொருளாதார நிதித் திட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் எடுத்துள்ள முடிவுகள் துணிச்சலானவை என அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், உறுதியான பொருளாதாரம் இருந்தால் தான் உலக அரங்கில் இந்தியாவின் குரல் எடுபடும் என கூறி இருக்கிறார்.

பிரதமர் மோடியின் தலைமையில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை வலுப்படுத்த நிர்மலா சீத்தாராமன் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாராட்டிய அவர், இதன் அடிப்படையில் நமது வெளிநாட்டுக் கொள்கை உள்நாட்டிலேயே துவங்கி விடுகிறது என்றும் வர்ணித்துள்ளார். பிரதமரின் சுயசார்பு திட்டத்தை புகழ்ந்த அவர், அதனால் உலகிற்கு நம்மால் கூடுதல் பங்களிப்புகளை அளிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: